புதிய அரசியலமைப்புச் சட்டம் ஊடாக சுமந்திரன் போன்றவர்கள் தனித்து பிரிந்து செல்லும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன இதனை கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் சமஷ்டி இருக்கின்றது. சுமந்திரன் ஐயா அது அங்கே இருக்கட்டும். அமெரிக்காவில், கனடாவில், அவுஸ்திரேலியாவில் சமஷ்டி இருக்கட்டும். இலங்கை, அமெரிக்கா அல்ல. இலங்கை, அவுஸ்திரேலியா அல்ல. இது ஒரு சிறிய நாடு.
“இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாய் என சகல இனங்களும் வாழ்கின்றனர். பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கம் என அனைத்து மதங்களும் இலங்கையர்கள் என்று வாழும் நாடு.
இந்த நாட்டை உலகில் பிரியும் மக்களுடன் ஒப்பிட வேண்டாம். இனவாதம் மூலம் தனித்து வாழும் நாடு ஒன்றை பெற வேண்டும் என்பதே சுமந்திரனின் தேவை. வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று சுமந்திரன் கூறுகிறார்.
நாட்டில் 9 மாகாணங்கள் இருக்கும் போது, இரண்டு மாகாணங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று சுமந்திரன் கூறுகிறார். வடக்கு, கிழக்கில் இருந்து 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பதே இதற்கு காரணம் என்கிறார்.
தென் மற்றும் மேல் மாகாணத்தவர் இதனை கூற ஆரம்பித்தால், நாங்கள் இந்த மாகாணங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றோம் பெந்தோட்டையில் உள்ள பாலத்திற்கு ஏதாவது செய்து இரண்டு மாகாணங்களையும் இணையுங்கள் என்று கூறினால். பிரித்து வேறுப்படுத்துவதால், ஏற்படும் நிலைமை என்ன?. இதுவா தேவைப்படுகிறது.
பிரிய வேண்டிய விதத்தை கற்பிக்கின்றனர். தனித்து இருக்க முயற்சிக்கின்றனர். தனித்து வாழ வேண்டிய விதத்தை கற்பிக்கின்றனர். மீண்டும் யுத்தம் ஏற்படும் நிலைமையை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். இதனால், இந்த அரசியலமைப்புச் சட்டம் நாட்டுக்கு கெடுதியை ஏற்படுத்தும்” என ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.