விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் நாடாளுமன்றம் வந்தால்? தற்போதைய நிலைமை போல் சந்தர்ப்பம் அமையாது

Report Print Steephen Steephen in அரசியல்

2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு விக்னேஸ்வரன் வரக் கூடும். அதேபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரக் கூடும். அப்போது அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வரும் போது தற்போதைய நிலைமை போல் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் தேவை முழு நாட்டுக்கும் உள்ளது. 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் 19 முறை திருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் திருத்தங்களை செய்வதா அல்லது புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வருவதா என்று தீர்மானிக்க வேண்டும்.

1972 ஆம் ஆண்டு அன்று ஆட்சியில் இருந்து ஐக்கிய முன்னணி அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அப்போது அந்த கட்சி மட்டுமே அதற்கு பங்களிப்பை வழங்கியது.

மூன்று இரண்டு பெரும்பான்மை பலத்திற்கும் அதிகமான பலம் அவர்களுக்கு இருந்ததே இதற்கு காரணம். இதனால், அவர்களுக்கு தேவையான அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தார்களே அன்றி நாட்டுக்குத் தேவையான அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரவில்லை.

அதேபோலே எமது கட்சி சார்பில் ஜே.ஆர். ஜெயவர்தன 1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது மூன்றில் 5 பெரும்பான்மை பலம் ஜே.ஆர். அரசாங்கத்திற்கு இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதில் நாடாளுமன்றத்தில் எந்த தடைகளும் இருக்கவில்லை. அத்துடன் மக்கள் ஆதரவும் ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு இருந்தது. அவர் தனக்கு பெருத்தமான அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தார். அது நாட்டுக்கும் பொருந்தியது. அந்த அரசியலமைப்புச் சட்டம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டுக்கும் பொருத்தமானது சிறந்த அரசியலமைப்புச் சட்டமாக இருந்தது.

எனினும் நாம் தற்போது கொண்டு வர முயற்சிக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொருத்தமான அரசியலமைப்புச் சட்டம் அல்ல. ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொருத்தமான அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர எமக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை. இதுதான் உண்மையான கதை.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிக்கு வரும் போது வாக்குறுதி ஒன்றை வழங்கினார். இதனால், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரும் பொறுப்பு அவருக்கும் இருக்கின்றது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும். இதற்கு இரண்டு பிரதான கட்சிகள் இணங்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்காக அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக பொதுஜன பெரமுன குற்றம் சுமத்துகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாது, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரக்கூடிய சிறந்த சந்தர்ப்பம் தற்போது உள்ளது.

அனைவரும் இணக்கத்துடன் செயற்பட கூடிய சந்தர்ப்பம் இது. நாடாளுமன்றத்தில் எவருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியும். இது சிறந்த மற்றும் இறுதி சந்தர்ப்பமாகவும் இருக்கக் கூடும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுமந்திரனை தொடர்ந்தும் விமர்சித்தாலும் சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்காக குரல் கொடுத்து வருகிறது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு விக்னேஸ்வரன் வரக் கூடும். அதேபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரக் கூடும்.

அப்போது அரசியலமைப்புச் சட்டத்தை ஒன்றை கொண்டு வரும் போது தற்போதைய நிலைமைப் போல் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வரவில்லை என்றால், இன்னும் 100 ஆண்டுகளுக்கு ஜே.ஆர்.ஜெயவர்தன கொண்டு வந்த 78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமே அமுலில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரும் நேரம் இதுவல்ல என்று எவராவது கூறுவார்களாயின் அது தவறானது. இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கான சிறந்த சந்தர்ப்பம். அனைவரும் இணக்கத்துடன் முன்னோக்கி செல்ல முடியும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.