முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நாலக டி சில்வாவுக்கு மருத்துவ சிகிச்சை தேவை எனில், மருத்துவ பரிந்துரைக்கு அமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை சம்பந்தமாக தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த இந்திய பிரஜை பல அரசியல்வாதிகளின் விடுகளுக்கு சென்றிருந்தாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இதற்கு அமைய நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச மற்றும் சஷி வீரவங்ச ஆகியோரை வாக்குமூலம் பெற அழைப்பு விடுத்த போதிலும் அவர்கள் இதுவரை வாக்குமூலங்களை வழங்க வரவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தள்ளனர்.