மரண தண்டனை நிறைவேற்றும் ஆவணங்கள் மாயம்! மைத்திரி வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் மரண தண்டனையை விதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, “போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள 100க்கும் மேற்பட்ட மரணத்தண்டனை கைதிகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. எனினும் அந்த முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளினதும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள், அனைத்தும் காணாமல் போயுள்ளது.

நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆவணங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற ஆவணம் மாத்திரமே காணப்படுகின்றது. சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகர்களினால் இந்த ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

காணாமல் போன ஆவணங்களை எவ்வாறேனும் கண்டுபிடித்து, போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கான தண்டனையை தான் நிறைவேற்ற பின்வாங்கப் போவதில்லை.

இதேவேளை, போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜையொருவரின் ஆவணம் மாத்திரமே காணப்படுகின்றது. எனினும் அவருக்கு தண்டனையை நிறைவேற்றப்போவதில்லை என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.