மனிதப் படுகொலையில் ஈடுபட்ட 11 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு! பாதுகாப்பு அமைச்சு அதிரடி நடவடிக்கை

Report Print Murali Murali in அரசியல்
825Shares

மிலேச்சத்தனமாக இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் 11 பேருக்கு எதிராக அடுத்த இரு வாரத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இராணுவத்திற்கு சென்ற ஒருவர் கொலை செய்தால் அவர் இராணுவ வீரர் அல்ல. அவர் கொலைகாரர். நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நாம் அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்.

இந்நிலையில், மிலேச்சத்தனமாக இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் 11 பேருக்கு எதிராக அடுத்த இரு வாரத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் எங்களிடம் தருமாறு கோருகின்றேன்.

அதனை விசாரித்து அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இதேவேளை, பதிவு செய்யப்பட்டுள்ள 9 மில்லி மீட்டர் ரக பிஸ்டல் மற்றும் ரிவால்வர் துப்பாக்கிகளுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களை தற்காலிகமாக இரத்து செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த துப்பாக்கிகளுக்கான புதிய அனுமதிப்பத்திர விநியோகம் நாளை மறுதினம் முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளார்.