என்மீது உள்ள அரசியல் பொறாமை காரணமாக தயவு செய்து மக்களுக்கு கிடைக்கின்ற சேவைகளை தடுக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களை கேட்டு கொள்வதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறை - நிந்தவூரில் நேற்றிரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நிந்தவூர் 'பீச் பார்க்' நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. விரைவில் அதை முடிப்போம். இந்த பிரதேச மக்கள் தங்கள் பொழுதை கழிப்பதற்கு இவ்வாறான ஏற்பாடு தேவையாக உள்ளது.
தொற்றா நோயை தடுப்பதற்கு உடற்பயிற்சி அவசியம். அதற்காக நாம் நடை பாதை ஒன்றை அமைக்க இருக்கின்றோம்.
இந்த வேலைத் திட்டத்திற்காக 2225 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. எமது தலைவர் ரவூப் ஹக்கீமின் உதவியால் இது கிடைக்கின்றது.
நிந்தவூர் மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக எமக்கு 300 மில்லியன் ரூபா நிதி கிடைத்த போதிலும் பிரதேச சபையின் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பணம் மீண்டும் திறை சேரிக்கு திரும்பிச் சென்றுவிட்டது.
இதற்காக தான் நாம் தேர்தல் காலங்களில் எங்களிடம் சபையைத் தாருங்கள் என்று கேட்டோம். ஆட்சி செய்ய போகிறவர்கள் நாங்கள். எங்களிடம் சபை இருந்தால் தான் சேவை செய்ய முடியும் என்று கூறினோம்.
நீங்கள் எங்களிடம் சபையை தராததன் காரணமாக இன்று நாங்கள் நிதியை கொண்டு வந்து கொட்டி அபிவிருத்திகளை செய்கின்ற போதிலும், பிரதேச சபை அதற்கு தடையாக இருக்கின்றது.
கம்பெரெலிய வேலைத் திட்டத்தின் ஊடாக 22 வீதிகளை செப்பனிட்டோம். அவற்றை முடிப்பதற்கு நாங்கள் எதிர் கொண்ட கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்.
பிரதேச சபை அதிக முட்டுக்கட்டைகள் போட்டன. சாரத்தை மடித்துக்கட்டிக் கொண்டு சண்டித்தனத்தில் தான் நாம் வீதிகளை போட்டோம்.
இனி செய்யப்போகின்ற வேலைகளுக்கும் அவ்வாறே இந்த பிரதேச சபை முட்டுக்கக்கட்டை போடும். மக்கள் தான் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொழும்பு, கண்டி மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களுக்கு செல்லாமல் எங்களது பகுதிகளிலேயே அனைத்து வைத்திய சேவைகளையும் பெற வேண்டும் என்பதே எனது கனவு. அதை அடைவதற்காக உழைப்பேன்.
எமது பிரதேசத்தில் பூரணமான சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்ற கனவு எனக்கு உண்டு. அதில் ஒன்று தான் ஒலுவில் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் அமைக்கும் கனவு. அவ்வாறு அமைப்பதென்றால் போதனா வைத்தியசாலை ஒன்று தேவை.
கரையோர வைத்தியசாலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதனூடாக அந்த போதனா வைத்தியசாலையை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளேன். இந்த கனவை நிறைவேற்றும் வரை நான் அயராது உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.