முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

Report Print Kamel Kamel in அரசியல்
264Shares

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரண்டு பேருக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் கஜபா படைப் பிரிவினைச் சேர்ந்த கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட எட்டு பேரை வில்பத்து காட்டில் வைத்து சுட்டுக் கொன்றதாக இந்த முன்னாள் போராளிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வில்பத்து வனப் பகுதியின் பாதுகாப்பு நிலைமைகளை கண்காணிப்பதற்காக ஜிப் ஒன்றில் பயணித்த போது படையினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு முன்னாள் போராளிகளுக்கும் வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன், தலா இருபத்து ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

சட்ட மா அதிபரினால் சந்தேக நபர்களுக்கு எதிராக தனித் தனியாக அனுராதபுரம் மேல் நீதிமன்றில் 9 குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன் அதில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

குறித்த இருவரும் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியகாந்தன் ஜெயசந்திரன் எனப்படும் உதயன் மற்றும் சிவபிரகாசன் சீலன் எனப்படும் இலையன் ஆகியோருக்கே இந்த தண்டனை இன்றைய தினம் விதிக்கப்பட்டுள்ளது.