புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் விக்னேஸ்வரன் உள்நுழைந்தால் இலகுவாக எதனையும் செய்துகொள்ள முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்த சட்டமூலம் மீதான விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளா். இதன்போது மன்றில் உரையாற்றிய அவர்,
பாரிய இலஞ்ச ஊழல் மற்றும் குற்றங்கள் குறித்து ஆராய நீதி அமைச்சர் மூலமாக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைத்த காரணத்தினால் தான் கடந்த ஒக்டோபர் மாதம் அரசியல் குழப்பம் ஒன்றினை ஏற்படுத்தினர். குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற தேவை ஒரு சிலருக்கு இருந்தது.
இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் விக்கினேஸ்வரன் உள்நுழைந்தால் இலகுவாக எதனையும் செய்துகொள்ள முடியாது என்றார்.
நேற்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதி அமைச்சர் நளின் பண்டார, 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு விக்னேஸ்வரன் வரக் கூடும். அதேபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரக் கூடும்.
அப்போது அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வரும் போது தற்போதைய நிலைமை போல் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.