துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார்: ஹிருனிகா

Report Print Kamel Kamel in அரசியல்
203Shares

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

போதைப் பொருளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜனாதிபதி எவ்வாறு துமிந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென கொழும்பு மக்கள் மகஜர் ஒன்றில் கையொப்பம் திரட்டும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமையவே இவ்வாறு கையொப்பங்கள் திரட்டப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கான நல்ல சாட்சியங்கள் என்னிடம் உண்டு.

ஜனாதிபதியின் கொள்கையற்ற நிலைக்கு நாம் என்னதான் செய்வது? 2015ம் ஆண்டில் இவ்வாறான ஓர் நபரை பிரதமராக்குவதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன் என்பதனை நினைக்கும் போது வேதனையடைகின்றேன்.

அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஜனாதிபதிகள் இரண்டாம் தவணைக்காக போட்டியிடும் போதே மக்கள் வெறுப்பார்கள் எனினும் தற்போதைய ஜனாதிபதியை முதல் தவணையிலேயே மக்கள் வெறுக்கின்றனர்.

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டுமாயின் சட்ட மா அதிபரின் பரிந்துரையும், நீதி அமைச்சரின் பரிந்துரையும் தேவைப்படுகின்றது.

தற்போதைய நீதி அமைச்சர் முதுகெலும்பு உள்ள நல்ல பெண்மணி அவர் ஒருபோதும் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்க இணங்க மாட்டார் என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.