மைத்திரியின் பேராசைக்கு பலியான மகிந்த!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேராசை காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற பேராசையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அவரது கொள்கைக்கு முரணாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஹிருனிகா பிரேமசந்திர,

“மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு எதிர்வரும் சுதந்திர தினத்தில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்காக ஜனாதிபதியின் அறிவுறுத்தலுடன் கொலண்ணாவை உட்பட கொழும்பு மாவட்டத்தின் மக்களிடம் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருவதாக சமூக வலைத்தலங்களில் பிரசுரமாகி இருக்கின்றது.

இது தொடர்பான சாட்சிகளும் என்னிடம் இருக்கின்றன. துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை.

எனினும், துமிந்த சில்வா போன்றவர்களுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் இருக்கும் ஏனைய கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படும்.

பிற்காலத்தில் இது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஜனாதிபதி, துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பளிக்க நடவடிக்கை எடுக்கமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாகவேண்டும் என்ற பேராசையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அவரது கொள்கைக்கு முரணாக செயற்பட்டு வருகின்றார்.

இதன் காரணமாகவே, தனது எதிரியாக தெரிவித்து வந்த மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக்கினார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.