பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு லண்டனில் பிடியாணை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Murali Murali in அரசியல்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை, வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன தல்பஹேவ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

“பிரிகேடியர் பெர்னான்டோ அப்போது இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்தார். எனவே அவருக்கு இராஜதந்திர விலக்குரிமையும்,சிறப்புரிமைகளும் இருந்தன.

பிரிகேடியர் பிரியங்க வழக்கு ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டது. இது வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் என, பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்திடம் தெரிவித்துள்ளோம்.

இந்த வழக்கு கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கம், பிரித்தானிய வெளிவிவகார பணியகத்திடம் எதிர்ப்பை வெளியிட்டது.

இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட சமர்ப்பணத்தில், பிரிகேடியர் பிரியங்க, பிரித்தானியாவை வதிவிடமாக கொண்டவரில்லை. இராஜதந்திர தலைவராக பிரித்தானியாவுக்கு கடமைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

எனவே அவருக்கு விலக்குரிமையும், முன்னுரிமைகளும் இருந்தன. எமது இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு கூறியிருக்கிறோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற பதிலுக்காக காத்திருக்கிறோம்.

வழக்கு விசாரிக்கப்பட முன்னரே, எமது எதிர்ப்பை சமர்ப்பித்திருந்தோம். ஆனாலும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துக்கும், நீதிமன்றத்துக்கும் இடையில் உள்ளக கலந்துரையாடல் நடந்ததா என்று எமக்குத் தெரியாது. ஆனால் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers