வடக்கு பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்கு உதவியதாக தெரிவித்துள்ள தமிழ் பேசும் அமைச்சர்

Report Print Thileepan Thileepan in அரசியல்

வடக்கில் உள்ள பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்காக விகாரதிபதிகள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் தாம் உதவியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தெற்கில் வாழும் சிங்கள சமூகத்தினர் நேற்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு வவுனியா பன்சலையில் வழங்கிய வரவேற்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தக் கெடுபிடிகளில் இருந்து விடுபட்டு மீண்டும் சமாதானக்காற்றை சுவாசித்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் இனங்களுக்கிடையே மோதல், மதங்களுக்கிடையே பிரச்சினைகள், சமூகங்களுக்கு இடையே பிரிவினைகள் என மேலோங்கி இருந்ததனால் பிளவுகளும் பிரச்சினைகளும் அதிகரித்திருந்தன.

வவுனியாவில் வாழ்ந்து வந்த சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையிலான பிளவுகள் ஏற்பட்டதனால் மாவட்டத்தின் அமைதி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. யுத்த காலத்திலே இந்த மக்கள் பட்ட கஷ்டங்களை நாம் விபரிக்க முடியாது.

எனினும் எம்மை பொறுத்த வரையில் நாம் எந்த ஓர் இனத்துக்கும் பேதம் பாராது பணியாற்றி இருக்கின்றேன். உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு, பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன். முடியுமான அத்தனை உதவிகளையும் மேற்கொண்டிருக்கின்றேன்.

யுத்த காலத்தில் பீதியில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கு தைரியமூட்டி இருக்கின்றேன். வவுனியாவில் பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் வாழ்ந்த பௌத்த மதகுருமார்களுக்கு இது நன்கு தெரியும்.

அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், கோரிக்கைகளுக்கு எல்லாம் செவிசாய்த்து மனச்சாட்சிப்படி நாம் உதவியிருக்கின்றோம்.

மனிதாபிமான அடிப்படையிலேயே எமது உதவிகள் வழங்கப்பட்டதேயொழிய தேர்தல்களையோ வாக்குகளையோ மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. அவ்வாறு நாம் எந்த காலத்திலும் செயற்படமாட்டோம்.

மக்களின் துன்பங்களிலே நாம் ஒருபோதும் அரசியல் நடத்த விளைந்ததில்லை. எனினும் எமது சேவையை அங்கீகரித்ததனாலேயே எங்களது அரசியல் செயற்பாடுகளுக்கும் சிங்கள சகோதரர்கள் ஆதரவளிக்க தொடங்கினர்.

அது மாத்திரம் இன்றி எமது நேர்மையான பணிகளை பௌத்த மதகுருமாரும் அங்கீகரித்தனர்.

கடந்த காலங்களில் நாம் சில தீர்க்கமான அரசியல் முடிவுகளை மேற்கொள்ள முன்னர், எம்முடன் நெருக்கம் கொண்டிருக்கும் சமயப் பெரியார்களுடன் ஆலோசனை பெற்றபின்னரே இறுதி முடிவை மேற்கொண்டிருக்கின்றோம்.

மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் நாம் ஆதரித்த வேட்பாளர்களே வெற்றிபெற்றனர்.

உங்களின் ஆதரவும் இறைவனின் உதவியும் எமக்கிருந்தது. அதே போன்று அண்மையில் அரசியலில் ஏற்பட்ட பிரளயத்தின் போது, அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் நாம் எடுத்த சரியான முடிவினாலும் நீதியும் எமக்கு துணைசெய்ததாலும், மிகச்சரியான தடயத்தில் பயணிக்க முடிந்தது.

அமைச்சுப்பதவியை பறித்தெடுத்தனர். குறிப்பிட்ட காலத்தில் எம்மை ஓரங்கட்டவும் வீழ்த்தவும் சிலர் சதி செய்தனர். எனினும் அவைகளெல்லாம் தோல்விபெற்றதனால் எமக்கு மீண்டும் அமைச்சுப்பதவி கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

Latest Offers