ஜப்பான் அரசிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள்

Report Print Rakesh in அரசியல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை துரித கதியில் அபிவிருத்தி செய்ய ஜப்பான் அரசு தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்திற்கு நேற்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவரான அகிரா சுகியமா விஜயம் செய்துள்ளார். இச் சந்திப்பின் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கொடூர போரால் சின்னாபின்னமாகின. இந்த மாகாணங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, இந்த மாகாணங்களை துரித கதியில் அபிவிருத்தி செய்ய ஜப்பான் அரசு தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.

இந்த உதவிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் பலர் காத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளையும் ஜப்பான் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கையில் சர்வதேச சமூகத்தின் வகிபாகம், புதிய அரசமைப்பு மற்றும் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.