மைத்திரிக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கினால் மட்டுமே மகிந்த அணியுடன் கூட்டணி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியளிக்காவிட்டால், அந்த கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்குமாயின் இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களது அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும், மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்தால் மட்டுமே அந்த பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போது, தான் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலரை, தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தனர் எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியை அமைப்பதை விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுவது சிறந்தது.

தனித்து போட்டியிட்டால், கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெல்லும் ஆசனங்களை விட அதிகளவான ஆசனங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் கைப்பற்ற முடியும் எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.