அநீதியான குற்றச்சாட்டை சுமத்தும் விமல் வீரவங்ச! கரு ஜயசூரிய தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதம நீதியரசர் பதவிக்கு முன்னாள் நீதியரசர் ஈவா வனசுந்தரவின் பெயரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்ததாகவும், அரசியலமைப்பு பேரவை அதனை நிராகரித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

எனினும் ஈவா வனசுந்தரவின் பெயரை, ஜனாதிபதி பரிந்துரைத்திருக்கவில்லை எனவும், விமல் வீரவங்ச அநீதியான குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் அரசியலமைப்பு பேரவையின் தலைவரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

ஈவா வனசுந்தரவின் பெயரை ஜனாதிபதி ஏன் பரிந்துரைக்கவில்லை என விமல் வீரவங்ச, சபாநாயகரிடம் வினவினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர் அது தனக்கு தெரியாது எனக் கூறினார்.

ஈவா வனசுந்தரவின் பெயரை பரிந்துரைத்தால், அதனை நிராகரிப்போம் என பிரதமரின் அணியினர் கூறியதன் காரணமாகவே அவரது பெயரை ஜனாதிபதி பரிந்துரைக்கவில்லை என விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவிக்கு ஜனாதிபதி வழங்கிய இரண்டாவது பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டமை சம்பந்தமாக நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தெளிவுப்படுத்த பின், இந்த விவாதம் ஏற்பட்டது.

அரசியலமைப்பு பேரவையின் அனைத்து உறுப்பினர்களின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே குறித்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டதாகவும் அதற்கான காரணத்தை ஜனாதிபதி ஏற்று கொண்டதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers