அடுத்த ஆண்டு ராஜபக்சவினருக்கு அரசியலில் இடம் இருக்காது: சம்பிக்க

Report Print Steephen Steephen in அரசியல்

குடும்ப அரசியல் மீண்டும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இடமளிக்க போவதில்லை என பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த வருடம் ராஜபக்ச அச்சத்தை போக்கும் வருடம். அடுத்த ஆண்டு முதல் ராஜபக்சவினருக்கு அரசியலில் இடம் இருக்காது. குடும்பவாதத்தை காட்டி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முதலில் அவர் இலங்கையின் பிரஜையாக இருக்க வேண்டும். வெளிநாடு ஒன்றின் குடிமகனாக இருந்து கொண்டு இலங்கையில் தேசப்பற்று குறித்து பேச முடியாது.

விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் நடந்த ஊழலில் சம்பாதித்த 6 மில்லியன் டொலர் பணத்தை வெளிநாட்டில் மறைத்து வைத்தமை தொடர்பில் முதலில் கோத்தபாய பதிலளிக்க வேண்டும்.

அவன்கார்ட் நிறுவனத்திற்கு கடற்படையின் பணிகளை வழங்கியமை தொடர்பிலும் கோத்தபாய பதிலளிக்க வேண்டும்.

2005 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கான பாதையை நாங்களே அமைத்தோம். அடுத்த முறையும் அந்த பாதையை அமைப்போம்.

நாட்டின் கடன் சுமையை போக்கி, நாட்டின் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து ஒரே குடும்பமாக இருக்கும் வகையிலான ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்த நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

அதேவேளை அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக பொய்யான பீதியை ஏற்படுத்தியுள்ளனர். மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கி நாட்டை பிரிக்க போவதாக மகிந்த ராஜபக்சவும் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விசேட நிபுணர்களின் அறிக்கை கொண்டு வரும் போது அது சிறந்தது. தற்போது கொண்டு வந்தால் அது தவறு. இப்படியான வஞ்சனையான அரசியல்வாதிகளை மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும்.

முதலில் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சியின் போது கொண்டு வந்த திஸ்ஸ விதாரண அறிக்கை மற்றும் சந்திரிக்கா காலத்தில் அவர் கை உயர்த்திய அரசியலமைப்புச் சட்டத்தை வாசித்து விட்டு சமஷ்டி பற்றி பேசுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.