ஞானசாரரை விடுவித்தால் நாட்டில் வன்முறை தொடரும்!

Report Print Ajith Ajith in அரசியல்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய ஜனாதிபதி முனைகிறார் என்ற செய்தி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஞானசார தேரரை விடுவிக்கக்கோரிய கடிதம் ஒன்றை பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்

இதன்படி அவருக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. தமக்கு கிடைத்த பல கோரிக்கைகளை கருத்திற்கொண்டே இந்த கடிதத்தை தாம் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக பெரேரா குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் ஞானசார தேரர் இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று விடுவிக்கப்படுவார் என்று ஜனாதிபதியின் சகாக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதியும் இது தொடர்பில் பொதுபலசேனா அமைப்புடன் பேசியுள்ளார். இந்தநிலையில் ஜனாதிபதியின் இந்த முனைப்பை பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் கண்டித்துள்ளன.

மனித உரிமைகள் நடவடிக்கையாளர் சாமர வெத்திமுனி இது தொடர்பில் கூறுகையில், “இந்த நடவடிக்கையை ஏனைய மதத்தினரும் எதிர்ப்பார்க்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் பணிப்பாளர் அலன் கீனான் தமது கருத்தில்,

“நல்லிணக்க அரசாங்கத்தின் அங்கத்தவர்களாக தம்மைக்கூறிக்கொள்ளும் மங்கள சமரவீர, மனோ கணேசன், ஹர்ச டி சில்வா ஆகியோர் இருக்கும்போது ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுமானால், நாட்டில் வன்முறை, பதற்றம் மற்றும் நிலையின்மை என்பன தொடரவே செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்