ஜனாதிபதி பிறப்பித்துள்ள விசேட பணிப்புரை!

Report Print Murali Murali in அரசியல்

கடமையில் இருக்கின்றபோதோ, பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாகவோ அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பணிகளின்போதோ அங்கவீனமுற்ற முப்படையினருக்கும். உயிர்நீத்த படையினரின் மனைவிமார் மற்றும் தங்கி வாழ்கின்றவர்களுக்கும் 55 வயது வரையில் வழங்கப்பட்ட ஊதியங்கள், கொடுப்பனவுகளை உயிர்வாழும் வரையில் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த இரண்டு மாத காலப்பகுதியில் இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அங்கவீனமுற்ற படைவீரர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்துவந்த இந்தப் பிரச்சினையை தீர்ப்பதில் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே இது குறித்து தெரிவிக்கப்பட்டது.

அங்கவீனமுற்ற, உயிர்நீத்த படைவீரர்களின் தேசிய அமைப்பு, படைவீரர்களின் மனைவிமார்களின் மாவட்ட மற்றும் தேசிய அமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அங்கவீனமுற்ற படையினரால் 08 கோரிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அந்த அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியின் வழிகாட்டலில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

படைவீரர்களின் தேவைகளை அறிந்து அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி, தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இதன்போது படைவீரர்களின் பாராட்டுக்குள்ளானது.

பாதுகாப்பு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சனத் வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான அநுராத விஜேகோன், விஜிதா மாயாதுன்னே ஆகியோரும் முப்படைகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.