தேசிய வளங்களை விற்பனை செய்வது எனது கொள்கையல்ல! மகிந்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

ஜப்பான் வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்யக்கூடிய சிறந்த பிரதேசம் ஹம்பாந்தோட்டை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் கியாடோ ஊடக நிறுவனம் நடத்திய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை அபிவிருத்தி செய்ய அரச வளங்களை விற்பனை செய்ய தேவையில்லை. நாட்டின் வளங்களை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். தேசிய வளங்களை விற்பனை செய்வது எனது கொள்கையல்ல.

30 ஆண்டுகள் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற இலங்கையை அபிவிருத்தி செய்ய அரச வளங்களை விற்பனை செய்யக் கூடாது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கையின் காணிகளை சொந்தமாக விற்பனை செய்தமை தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

1 - சோமாவதிய புனித பூமி பகுதிக்கு அருகில் 5000 ஏக்கர் காணி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அமெரிக்காவின் டோல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. டோல் நிறுவனம் அந்த இடத்தில் தற்போது வாழைப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகிறது.

2 - அதேபோல் டோல் நிறுவனத்திற்கு உல்ஹிட்டிய பிரதேசத்தில் 1500 ஏக்கரும், பெலவத்தை பிரதேசத்தில் 1200 ஏக்கர் காணிகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விற்பனை செய்தது.

3 - கொழும்பு துறைமுக நகரில் 220 ஏக்கர் காணி சீனாவுக்கு சொந்தமாக எழுதிக் கொடுக்கப்பட்டதுடன் தற்போதைய அரசாங்கம் அந்த உடன்படிக்கையில் திருத்தங்களை செய்து, 600 ஏக்கர் காணியை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியது.

மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் துறைமுக நகரில் சீனாவுக்கு விற்பனை செய்யப்படவிருந்த காணியின் மேற்பரப்பில் சீனாவின் அனுமதியின்றி இலங்கையின் விமானங்கள் கூட பறக்க முடியாது என்ற நிபந்தனை உள்ளடக்கப்பட்டிருந்தது.

சீனாவுடனான இந்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்தால், இலங்கைக்கு அருகில் சீனாவின் ஆட்சிக்கு உட்பட பகுதி ஒன்று உருவாகி இருக்கும் என அரசியல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அது இலங்கைக்கு மாத்திரமல்ல முழு தெற்காசிய பிராந்தியம் குறிப்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் என்பதுடன், இலங்கைக்கு சர்வதேச ரீதியான ராஜதந்திர பிரச்சினைகளை உருவாக்கியிருக்கும் என அந்த அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் உடன்படிக்கையில் மாற்றங்களை செய்யப்பட்டதால், பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

4 - இதனை தவிர கொழும்பு - காலிமுக திடலுக்கு அருகில் இராணுவ தலைமையகம் அமைந்திருந்த பகுதியில் 6 ஏக்கர் நிலம் சீனாவின் செங்ரீலா நிறுவனத்திற்கு சொந்தமாக எழுதிக் கொடுக்கப்பட்டது.

5 - மன்னார் வளைகுடா பகுதியில் இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் நாயின் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

எரிவாயு அகழ்ந்து எடுக்கப்படும் முன்னரே, எடுக்கப்படும் எரிவாயுவில் 90 வீதம் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அகழ்ந்து எடுக்கப்படும் எரிவாயுவில் இலங்கைக்கு 10 வீதம் மட்டுமே கிடைக்கும்.

6 - கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள 14 தீவுகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விற்பனை செய்ய தீர்மானித்திருந்தது.

எனினும் இரண்டு தீவுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. ஒரு தீவு இந்திய நிறுவனத்திற்கும் மற்றைய தீவு பெல்ஜியம் நிறுவனம் ஒன்றுக்கும் சொந்தமாக விற்பனை செய்யப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக ஏனைய தீவுகளை விற்பனை செய்ய முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நுரைச்சோலை, கெரவலப்பிட்டி அனல் மின் நிலையங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை சீனாவுக்கு விற்பனை செய்ய அமைச்சரவை பத்திரங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனா நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.