ஜனாதிபதி அரச பணத்தை தவறாக பயன்படுத்துகிறார்

Report Print Steephen Steephen in அரசியல்

அரச பணத்தை பயன்படுத்தி அரச தலைவர் மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ பயணங்களின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து செல்வது என்பது அரச பணத்தை தவறாக பயன்படுத்துவதாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து செல்வதால், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு உதவிகள் கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் உரித்தில்லாத அணியிடம் அரசாங்கத்தை கையளித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரிய நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றினார்.

இலங்கையின் அரச தலைவர் என்ற முறையில் அண்மையில் ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதை காண முடிந்தது.

ஜனாதிபதி தன்னுடன் அழைத்துச் செல்லும் தூதுக்குழுவினரை பார்க்கும் போது எமக்கு வருத்தமளிக்கின்றது.

அரச தலைவரான ஜனாதிபதி, தனது வெளிநாட்டு விஜயங்களின் போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் தலைவர்கள் அல்லது பொறுப்புக் கூற கூடியவர்களை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

எனினும் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ விஜயங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைத்துச் செல்கிறார். இதன் மூலம் அரச பணத்தை தவறாக பயன்படுத்துகிறார்.

அரச பணத்தை பயன்படுத்தி தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதை அரச பணத்தை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம் எனவும் துஷார இந்துனில் அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.