சிவசக்தி ஆனந்தன் எம்.பி வடக்கு ஆளுனருடன் சந்திப்பு

Report Print Thileepan Thileepan in அரசியல்

கேப்பாபுலவு காணி விடுவிப்பு மற்றும் மக்களின் கோரிக்கை தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு கிராம மக்கள், அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவித்து தம்மை மீளக்குடியமர வழிவிடுமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை வீதி ஓரங்களில் கூடாரங்கள் அமைத்து நடத்தி வருகின்றனர்.

தொடர் போராட்டம் 698 நாட்களை கடந்துவிட்ட நிலையில், காணிவிடுவிப்பு, மீள்குடியேற்றம் தொடர்பாக அரசு தரப்பில் எத்தகைய முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் பொறுமையிழந்துவிட்ட மக்கள், தமது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கைக்குழந்தைகளுடன் வீதியில் இறங்கி குறித்த இராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக அழுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேப்பாபுலவை சேர்ந்த 104 குடும்பங்களுக்கான 171 ஏக்கர் காணிகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவித்து மீளக்குடியமர அனுமதிப்பதாக வழங்கிய வாக்குறுதியும் மீறப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் குமுறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று கேப்பாபுலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, அம்மக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி அளித்துள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன் எம்.பி, இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவித்து கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார்.

இக்கோரிக்கைக்கு பதிலுரைத்த ஆளுநர், ஜனாதிபதி அவர்கள் தற்சமயம் வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியவுடன் காணி விடுவிப்பு தொடர்பாக அவருடன் பேசி சாதகமான ஒரு பதிலை தருவதாக தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் லண்டன் இணைப்பாளர் சஜீந்திரா ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.

இதன்பின் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபுலவு மக்களை சந்தித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கத்திற்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்கு கிடைத்த பரிசே நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையும், செம்மலை பிரதேசத்தில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள பெளத்த விகாரையும் என்று விசனம் தெரிவித்தார்.