பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை காப்பாற்றும் முயற்சியில் இலங்கை இராணுவம்!

Report Print Murali Murali in அரசியல்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீதான நடவடிக்கையை மீளப்பெறக் கோரி, மான்செஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இலங்கை இராணுவம் முறைப்படியான முறையீடு ஒன்றைச் செய்யவுள்ளது.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இந்த முறையீடு செய்யப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் ஆரப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில், கழுத்தை அறுப்பதைபோன்று பிரிகேடியர் பிரியங்க பொர்னான்டோ சைகை காட்டியமை தொடர்பில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான இரு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீதான நடவடிக்கையை மீளப்பெறக் கோரி, மான்செஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இலங்கை இராணுவம் முறைப்படியான முறையீடு ஒன்றைச் செய்யவுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து,

“பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ ஒரு கொண்டாடப்படும் போர் வீரர் என்றும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறும், இராணுவம் முறையீடு செய்யும் என கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி பிரிகேடியர் பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அன்று அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை மீளப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.