புலம் பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர்? பதவி நீக்குமாறு மைத்திரிக்கு கடும் அழுத்தம்

Report Print Murali Murali in அரசியல்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் இடம்பெற்ற முக்கிய படுகொலைகள் தொடர்பில் அடுத்த இரு வாரங்களில் 11 படையினர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவுள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், மிகவும் ஈவிரக்கமற்ற படுகொலைகளில் ஈடுபட்ட 11 படையினரிற்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கவுள்ளோம் எனவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

படையினர் இழைத்த குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் ஏதாவதுயிருந்தால் அவற்றை சமர்ப்பிக்குமாறு புலம்பெயர் தமிழர்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே, பாதுகாப்பு செயலாளரை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக அறியமுடிந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“பாதுகாப்புச் செயலாளரை அழைத்து, இந்த விடயம் தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறுமாறு ஜனாதிபதியிடம் தான் கூறியதாக” நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்கள் எமக்குத் தேவையில்லை. அவரது கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்நிலையில், பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, முன்னாள் படை அதிகாரிகளும் ஹேமசிறி பெர்னான்டோவின் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.