ரணிலுக்கு அதிர்ச்சி! அரசில் இருந்து வெளியேற தயாராகும் மனோ தலைமையிலான அணி?

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேற வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நேற்று நுகேகொடையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த கோரிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கும் வகையில் அமைந்துள்ள கூட்டு ஒப்பந்தம் அலரிமாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டமைக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து அதிருப்தியை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசிலிருந்துவிலகி நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக 1000 ரூபா வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். எனினும், தொழிலார்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

அதுவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறித்து பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தது.

இறுதி வரையில் பிரதமர் ரணிலுடன் இணைந்து போராடி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவியிருந்தது.

எனினும், தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கலந்துரையாடாமல், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் செயலுக்கு துணைப் போயுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.