முடிவிற்கு வரும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணம்?

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இனிமேல் ஜனாதிபதியாக வருவதற்கு தகுதியற்றவர் என்பதால் பொருத்தமான, வெற்றியை உறுதி செய்யக்கூடிய, நாட்டு மக்களின் மனதை வெல்ல கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச களமிறக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயவை களமிறக்க மஹிந்த முடிவெடுத்துள்ளார் என்று எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

உண்மையில் கோத்தபாய களமிறங்கினால் படுதோல்வியை சந்திப்பார். தமிழ் - முஸ்லிம் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

சிங்கள மக்களிலும் 60 வீதமானோர் அவரை எதிர்ப்பார்கள். எனவே, மஹிந்த தனது முடிவை மாற்றியமைக்க வேண்டும். இல்லையேல் மஹிந்தவின்அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிடும்.

ராஜபக்ச குடும்பத்தில் மஹிந்தவே நல்லவர்; நேர்மையானவர். ஏனையவர்கள் ஊழல்,மோசடிகள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர்கள்.

இப்படியானவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் முழு நாடும் கொதிப்படையும். மஹிந்தவின் நல்ல குணத்துக்கு அவர் தான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும்.

ஆனால், நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில்போட்டியிட முடியாது.

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல பங்காளிக்கட்சிகளும் ஒன்றுகூடி பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers