வரலாற்று வெற்றி அல்ல, பச்சை துரோகம்! பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் ஒப்பந்தம்

Report Print Sujitha Sri in அரசியல்

தோட்டத் தொழிலாளர்களை முதலாளிமார் சம்மேளனத்திடம் காட்டிக் கொடுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தற்போது பின்கதவால் அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சு பதவியை பெறும் குறுக்குவழி அரசியலிலும் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்றும், ஊதிய உயர்வாக வெறும் 20 ரூபாவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாக இருந்து வந்தது. அதற்கான அரசியல் மட்டத்திலான அழுத்தங்களையும் பிரயோகித்தோம். தொழிலாளர்கள் பக்கம் நின்று அவர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பினோம். போராட்டங்களையும் நடத்தியிருந்தோம்.

எனினும், அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்காவிட்டால் உடன்படிக்கையில் கைச்சாத்திட மாட்டோம் என வீராப்பு பேசிய ஆறுமுகன் தொண்டமானும், வடிவேல் சுரேசும் இறுதி நேரத்தில் பல்டி அடித்து மெகா காட்டிக் கொடுப்பை வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளனர்.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிய தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடித்துவிட்டு, 20 ரூபா சம்பள உயர்வுக்கு ஆமாம்சாமி போட்டு, கம்பனிகளிடம் முழுமையாக சரணடைந்துள்ளனர். இதற்கு பெயர் வரலாற்று வெற்றி அல்ல, பச்சை துரோகம் என்றே விளிக்க வேண்டும்.

2016ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நாளொன்றுக்கான மொத்த சம்பளமாக 730 ரூபா வழங்கப்பட்டது. இம்முறை கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 750 ரூபா வழங்கப்படவுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்துக்கான கொடுப்பனவு உள்ளிட்ட கம்பனிகளின் கட்டாய பங்களிப்பை சம்பளத்துடன் இணைத்து காட்ட முடியாது.

கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே மூன்றாம் தரப்பாக அரசாங்கத்தின் தலையீட்டை நாம் கோரினோம். எனினும், கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு துரோகத்துக்கு பிரதமரும் துணைபோய்விட்டாரா என்ற சந்தேகமும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லாத ஒப்பந்தத்தை அலரிமாளிகையில் வைத்து கைச்சாத்திடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தவறான முன்னுதாரணமாகும். இந்த நிகழ்வுக்கு பிரதமர் தலைமை வகித்திருக்க கூடாது.

இதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். பிரதமரை நேரில் சந்தித்து அதிருப்தியை வெளியிடவும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்த போதிலும் ஐக்கிய தேசியக்கட்சி செய்யும் அனைத்து விடயங்களுக்கும் கைதூக்குமளவுக்கு எமது கூட்டணி வங்குரோத்து அரசியலை நடத்தவில்லை.

மக்களுக்கு துரோகம், அநீதி இழைக்கப்படுமானால் பதவி, பட்டம் என எல்லாவற்றையும் தூக்கியெறியவும் தயார் நிலையிலேயே நாம் அரசியலை நடத்தி வருகின்றோம். அதேவேளை, தொழிலாளர்களை பணயம் வைத்து, அரசாங்கத்துக்கள் நுழைந்தது அமைச்சுப் பதவியை பெறும் நயவஞ்சக அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

அலரிமாளிகைக்குள் நுழைந்து, பிரதமருடன் சிரித்து பேசினால் தமிழ் முற்போக்கு கூட்டணி பலவீனமடைந்துவிடும் என இ.தொ.கா. நினைக்குமானால் அது அறியாமையின் வெளிப்படாகும்.

சங்கு எவ்வளவு தான் சுட்டாலும் வெண்மை மாறாது. அதுபோல் தான் மக்களுக்காக அரசியல் நடத்தும் நாம் சுயாதீனமாக செயற்பட்டால் கூட எமது கொள்கை மாறாது, இலட்சியம் சகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.