மொட்டு சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தயார்

Report Print Rakesh in அரசியல்

மொட்டு சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தயாராகிவிட்டதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலேயே தற்போது அதிகமாக பேசப்படுகின்றது.

எமது வேட்பாளரின் குடியுரிமை பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த அரசு ஆட்சிப்பீடத்தில் ஏறிய காலத்தில், மஹிந்த ராஜபக்ச மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

பஸில் ராஜபக்ச தான் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்றார். அந்தவகையில், இந்த அரசியல் போராட்டத்துக்கு உரிய தரப்பினர் உரிய நேரத்தில் களமிறங்குவர்.

எம்மிடமுள்ள சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது வேட்பாளர் தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் குடியுரிமை இருப்பதால் கோத்தபாய ராஜபக்சவும், பஸில் ராஜபக்சவும் போட்டியிட முடியாது என்று கூறுகின்றார்கள்.

இவ்வாறு எமது வேட்பாளர் குறித்தே அதிக கேள்விகள் எழுந்துள்ளன. எனினும், எமது தரப்பின் குடியுரிமை பிரச்சினையும், வேட்பாளர் பிரச்சினையும் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன.

யார் வேட்பாளர் என்று இப்போதே எம்மால் கூறமுடியாது. யார் சரியான நபரோ, அவர் உரிய நேரத்தில் களமிறங்குவார் என தெரிவித்துள்ளார்.