ஐ.தே.கட்சி, தேசிய அரசாங்கத்தை அமைக்க இதுவே காரணம்: ரொஷான் ரணசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக் குழுவின் விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே ஐ.தே.கட்சி மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாயின் அதற்கு காரணம் இருக்க வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த ஊழல், மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தமை அதில் ஒரு காரணம்.

ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதால், கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த ஊழல், மோசடிகள் தொடர்பாக தகவல்கள் முழுமையாக வெளியாகும்.

விசாரணை தொடர்பான அறிக்கை வெளியாகினால், மத்திய வங்கியின் ஆளுநர் முதல் ஊழலுடன் சம்பந்தப்பட்ட பெரிய நபர்களும் சிக்குவார்கள்.

சஜித் பிரேமதாசவின் அமைச்சின் கீழ் பெயர் பலகைகளை வைக்க 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் நடந்த இப்படியான பல ஊழல்கள் தொடர்பான தகவல்கள் ஆணைக்குழுவின் விசாரணைகளில் வெளியாகும்.

இந்த ஊழல், மோசடிகள் வெளியானால், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அதன் தலைவர்களுக்கோ எதிர்காலம் இருக்காது எனவும் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.