ரவிராஜ் கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, ரவிராஜின் மனைவி தாக்கல் செய்துள்ள திருத்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தீபாலி விஜேசுந்தர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டுள்ளது.

மனுவில் இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கடற்படை லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சியை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.

தான் விளக்கமறியலில் இருப்பதால், தனது சார்பில் ஆஜராக சட்டத்தரணி ஒருவரை நியமிக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்குமாறு பிரசாத் ஹெட்டியராச்சி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு அமைய விசாரணைகளை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், அன்றைய தினம் சட்டத்தரணி ஆஜராக்குமாறு உத்தரவிட்டனர்.

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை சட்டமா அதிபர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடர்ந்திருந்த நிலையில், அதனை அறங்கூறுநர் சபை முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என சசிகலா ரவிராஜ் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதனால், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அறங்கூறுநர் சபை வழங்கிய தீர்ப்பை இரத்து செய்து, சந்தேகநபர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.