அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

இரவு 10 மணிக்கு பின்னர் தான் பயணங்கள் செல்வதில்லை எனவும் தனது இந்த பழக்கத்தை பின்பற்றுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கூறியதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, தாமரை தடாகம் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற கலாபூசனம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கலாச்சார அமைச்சு ஒழுங்கு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், சுகவீனம் காரணமாக துறைக்கு பொறுப்பான அமைச்சரான சஜித் பிரேமதாச கலந்துக்கொள்ளவில்லை.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி சஜித் பிரேமதாச பற்றி கருத்து வெளியிடுகையில்,

“ தற்போதைய அரசாங்கத்தல் இருக்கும் மிகவும் திறமையான, நேர்மையான, பாடுபட்டு உழைக்கக் கூடிய மற்றும் நற்குணங்க கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச என நான் நம்புகிறேன். சுகவீனம் காரணமாக அவர் இன்று இங்கு வரவில்லை. அவர் இங்கு இல்லை என்றாலும் கலாசார அமைச்சு கிடைக்க வேண்டிய தகுதியானவருக்கே அந்த அமைச்சு கிடைத்துள்ளது.

அமைச்சர் சீக்கிரமாக குணமடைய வேண்டும் எனவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன். கௌரவ ஹேமா பிரேமதாச அவர்களே நான் கடந்த நாட்களில் 24 மணி நேரமும் ஓடியாடி வேலை செய்ய வேண்டாம் என சஜித்திடம் கூறினேன்.

அவர் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வருவதில்லை. காரணம் அவர் கொழும்பில் இருப்பதில்லை. காரணத்தை கேட்டால், நான் கொழும்புக்கு வரும் போது இரவு ஒரு மணி இரண்டு மணி என்பார். இரவு 10 மணிக்கு மேல் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பல பல முறை அவருக்கு கூறியிருக்கின்றேன்.

இரவு 10 மேல் பயணங்களை மேற்கொள்வதில்லை என்பது எனது கொள்கை. அதிகமாக வேலை செய்து, அதிகமாக அங்குமிங்கும் ஓடியே அவருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது. கலாசார அமைச்சரான சஜித் இந்த நிகழ்ச்சியில் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக தெரிகிறது” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.