வலி. வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in அரசியல்

வலி வடக்கு பிரதேசத்தின் விடுவிக்கப்பட வேண்டியிருக்கும் நிலப்பரப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பகுதியின் முன்பள்ளி, சனசமூக நிலையங்கள் ஆகியவற்றிற்கு 2018 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் திட்டங்களுக்கான பொருட்கள் வழங்கலுடன், நிறைவு பெற்ற நிர்மாண , புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களுடன் இணைந்து கீரிமலை பூர்வீக நிலப்பகுதியின் எல்லை பகுதிக்கு இன்று விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.

இதன் போது பூர்வீகமாக வழிபட்ட விஷ்ணு ஆலயம், பாரம்பரியமான சுடுகாட்டு பகுதியும், பூர்வீக கீரிமலை பிரதேசத்தினுள் காணப்படுவதாக மக்கள் தமது கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

பொன்னாலை பருத்தித்துறை வீதியின் 2 கிலோ மீற்றர்கள் மக்கள் பாவனை இன்றியும், குடும்பங்களின் குடியிருப்பு பகுதிகளும் அவற்றினுள் உள்ளடங்குவதாக வருகை தந்திருந்த மக்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது காணிகளை விடுவிக்குமாறு மக்களின் பிரஸ்தாபிப்பு மற்றும் பிரசன்னத்திற்கு மத்தியில் ஜனாதிபதியுடன் கதைத்து உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.