ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கின் சாட்சியாளர் பட்டியலில் ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் சார்பில் சாட்சியமளிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பல்வேறு துறைசார்ந்த 42 சாட்சியாளர்களின் பட்டியல் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இந்த பட்டியலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ரஞ்சன் சார்பில் ஆஜராகும் சட்ட நிறுவனத்தின் ஆலோசனையின் படி சாட்சியாளர்கள் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், பத்திரிகை ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களில் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாது சாதாரண நபர்களையும் அழைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

சாட்சியாளர் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர், சிரச,ஹிரு, தெரண, எம்.டி.வி இலத்திரனியல் ஊடகங்களில் பிரதானிகள், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், நாடாளுமன்ற செயலாளர், டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர், அனித்தா பத்திரிகையின் ஆசிரியர், கே.டப்ளியூ. ஜனரஞ்சன, சுயாதீன ஊடகவியலாளர் கசுன் புஸ்ஸேவல, உயாவிய நியண்டாய் சிங்கள திரைப்படத்தின் இயக்குனர் பிரசன்ன விதானகே, உயர்நீதிமன்ற பதிவாளர் உட்பட 42 சாட்சியாளர்களை அழைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த சாட்சியாளர்களுக்கு மேலதிகமாக பிரதம நீதியரசராக நளின் பெரேரா பதவியேற்ற போது வழங்கப்பட்ட வரவேற்பை ஏற்று ஆற்றிய உரை, விக்டர் ஐவன் எழுதிய நூல் ஒன்றையும் சாட்சியமாக முன்வைக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று மூன்றாவது நாளாகவும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சிசிர ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய மூவர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.