பூச்சாண்டியை உருவாக்கி அச்சுறுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

Report Print Steephen Steephen in அரசியல்

வெளிநாடு ஒன்றுக்கு இலங்கைக்குள் இராணுவ முகாமை அமைக்க இடமளிக்கும் எந்த தேவையும் இல்லை என்றும் அமெரிக்காவுடன் இதுவரை எந்த பாதுகாப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவில்லை எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்காவின் மாலி நாட்டில் நடந்த குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் பொலன்நறுவையில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று சென்றிருந்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து செய்தியாளர்கள் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுவரை அப்படியான உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா புரிந்துணர்வு உடன்படிக்கை பற்றி கூறியுள்ளது. எனினும் நாங்கள் பாதுகாப்பு அமைச்சுடன் அது பற்றி கலந்துரையாடி வருகின்றோம்.

இது ஓரிரு நாட்களில் செய்யக் கூடிய விஷயமல்ல. அவர்கள் முன்வைக்கும் யோசனைகளை ஆராய்ந்து, நாங்கள் முன்வைக்கும் யோசனைகளை வழங்கி பேச்சுவார்த்தை மூலமே முடிவு செய்யப்படும்.

அமெரிக்கா, இலங்கைக்கு வந்து முகாம் ஒன்றை அமைக்க போவதாக விமல் வீரவங்சவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலரும் கூறி வருவது குறித்து கவலையடைகின்றேன்.

அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. முகாமை அமைக்க அமெரிக்கா எங்களிடம் கோரிக்கை விடுக்கவும் இல்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவினர் வாரந்தோறும் பூச்சாண்டியை உருவாக்கி மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

இலங்கையில் வெளிநாடு ஒன்றின் முகாமை அமைக்க இடமளிக்க எமக்கு எந்த அவசியமும் இல்லை.எனினும் அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட நேரிட்டால், நாங்கள் அதனை நிராகரிக்க மாட்டோம்.

இதேவேளை, யோசனைகளை ஆராய்ந்து நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையில் அதனை மேற்கொள்வோம் என்றும் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.