சதியை முறியடித்த இரு தமிழ் சட்டத்தரணிகள்! பயங்கரவாத தடைச் சட்டம் ஒரு மாயவித்தை

Report Print Kumar in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும், வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பில் நடைப்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பயங்கரவாத சட்டத்தின் மூலம் எமது சிறுபான்மையினம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மை. எனவே எவ்வித சலுகைகளுக்காகவும் நாங்கள் விலைபோகாமல் இந்த சட்டங்களை எதிர்த்து நிற்போம்.

மக்கள் விடுதலை முன்னணியினரும், நாங்களும் கடந்த காலத்தில் ஒரு அரசியல் சதி நடந்த போது எதற்கும் விலைபோகாமல் அந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்காக முன் நின்றோம்.

முதலாவது வழக்கினை தாக்கல் செய்தது எமது தலைவர் சம்பந்தன். அந்த வழக்கினை சட்டத்தரணி கனகீஸ்வரன், சுமந்திரன் ஆகியோர் முன்னெடுத்துச் சென்று அந்த அரசியல் சதியினை முறியடித்தார்கள்.

ஒரு சர்வாதிகாரமான அரசியல் உருவாகியிருக்குமாக இருந்தால் 19ஆவது திருத்தத்தைத் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் அவர்களுக்கு இயைபான 18ஆவது திருத்தத்ததை கொண்டு வந்து ஜனநாயகத்திற்குள் ஒரு சர்வாதிகாரத்தை கொண்டு வந்திருப்பார்கள்.

பயங்கரவாத தடுப்புச் சட்டமாக இருந்தாலும் சரி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக இருந்தாலும் சரி அதற்கு கிள்ளுக்கிரையாக்கப்படப்போவது அல்லது பலியாக்கப்படப்போவது எமது மக்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பன நாட்டின் இறைமை என்று சொல்லிக் கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் நிலைத்து நிற்பதற்காகப் பயன்படுத்துகின்ற ஒரு மாயவித்தை.

அதிகார வர்க்கத்தின் இறைமையை விட எமது மக்களின் உரிமை என்கின்ற விடயம் எமக்கு மிக முக்கியமானவை.

மக்களின் உரிமையை துவம்சம் செய்து விட்டு அவர்களை அடிமைகளாக்கி விட்டு அதிகார வர்க்கம் இறைமை என்கின்ற சுவையை சுவைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கடந்த அரசியல் சூழ்ச்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஒரே நிலைப்பாட்டில் ஒரே கொள்கையில் இருந்தார்கள்.

மஹிந்த எங்களை அழைத்த போதும் நாங்கள் ஜனநாயகத்தின் பக்கமாக நிற்க வேண்டும். அரசியல் யாப்பினைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வலுவாக நின்றோம்.

எமது வலுவான நிலைப்பாட்டின் காரணமாக எமது சகோதர முஸ்லிம் கட்சிகள் கூட எங்களோடு இணைந்து இருந்தார்கள். குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இந்த சக்திக்கு எதிராக நின்று போராடினோம். வெற்றியும் பெற்றோம்.

இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், பயங்கரவாத தடை சட்டம் என்பன மோசமாக மனித உரிமைகளை மீறுகின்ற சட்டங்கள். தற்போது அந்த சட்டையை மாற்றி விட்டு கொண்டு வந்திருந்தாலும்.

இதன் நோக்கம் அதிகார வர்க்கம் தங்களது வண்டவாளங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், தாங்கள் நினைத்தபடி ஆட்சி செய்வதற்கும் இந்தச் சட்டங்களைக் கொண்டு ஜனநாயகத்திற்குள் ஒரு சர்வாதிகாரத்தை கொண்டு வருவதேயாகும்.

எனவே இவ்வாறான சட்டங்களுக்கு நாங்கள் எப்போதும் எதிராகவே செயற்படுவோம். கடந்த காலங்களில் குட்டிமணி தங்கதுரை போன்றவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட விதம் அனைவரும் அறிந்ததே.

பல சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் எடுத்து அதன் அடிப்படையில் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

எனவே மனித குலத்திற்கும், நாட்டிற்கும் அவமானமாக இருக்க கூடிய இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம்.

அது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...