விக்னேஸ்வரன் எதிர் டெனீஸ்வரன் வழக்கு! இன்று வருகின்றது முக்கிய தீர்ப்பு

Report Print Rakesh in அரசியல்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்ததாக தெரிவித்து வட மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கில், சீ.வி.விக்னேஸ்வரன் தரப்பில் கிளப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்க இருக்கின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவது தவறு என சுட்டிக்காட்டி, தம்மை பதவியில் தொடர அனுமதிக்கும்படி உத்தரவிட கோரி டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அதையொட்டி இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தது.

அந்த உத்தரவில் உடனடியாக டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் தொடர்வதற்கு ஆவன செய்யுமாறு மன்று பணித்திருந்தது.

ஆனால், தாம் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்றும், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை உதாசீனம் செய்து நீதிமன்றத்தை சீ.வி.விக்னேஸ்வரன் அவமதித்துள்ளதாக தெரிவித்து டெனீஸ்வரன் மற்றொரு வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க முடியாது என தெரிவித்து சீ.வி.விக்னேஸ்வரன் சார்பில் கிளப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை குறித்து விசாரணை நடத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு ஜனவரி 31ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

அந்தத் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.