மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்படவுள்ள கிண்ணியா தள வைத்தியசாலை!

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிண்ணியா தள வைத்தியசாலையை மாகாணசபையில் இருந்து விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை - கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நான் எடுத்துவரும் தொடர் முயற்சிக்கு உதவியாக இதனை மேற்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரானுக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலையில் தமிழர்கள் செறிந்து வாழும் திருகோணமலை நகரிலும் சிங்களவர்கள் செறிந்து வாழும் கந்தளாயிலும் உள்ள வைத்தியசாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

ஆனால் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள எந்த வைத்தியசாலையும் இதுவரை மத்திய ஆரசின் கீழ் உள்வாங்கப்படவில்லை.

அண்மையில் ஏற்பட்ட டெங்கு நோய் அனர்த்தத்தின் போது கிண்ணியாவில் மாத்திரம் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை தொடர்பில் தாங்கள் அறிவீர்கள்.

இந்த வைத்தியசாலை மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றமையால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வளங்களும் இடவசதியும் பற்றாக்குறையாக காணப்படுகின்றமையாலையே இவ்வாறான உயிரிழப்புக்கள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன.

இதனால் இந்த வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருமாறு கோரி டெங்கு தாக்கம் ஏற்பட்ட காலத்தில் என்னால் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் இதுவரை மாகாண சபை இந்த வைத்தியசாலையை விடுவிக்க சம்மதம் தெரிவிக்காமையால் அந்த நடவடிக்கைகளை தொடர முடியாதுள்ளது.

எனவே கிண்ணியா வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையால் இங்குள்ள நோயாளிகள் படும் கஷ்டங்களை மனதில் கொண்டு இந்த வைத்தியசாலையை மாகாண சபையில் இருந்து விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

மேலும் ஒரு தடவை இந்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்கு நிலவும் குறைப்பாடுகளை நேரடியாக பார்வையிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.