தமிழ் மக்கள் அமைச்சு பதவியை விரும்புவதில்லை: சீனித்தம்பி யோகேஸ்வரன்

Report Print Navoj in அரசியல்

தமிழ் மக்களுக்கு அமைச்சுப் பதவிகளை பெற்ற அபிவிருத்தி தான் தேவை என்றால் தேசிய கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் பிரதிநிதிகளுக்கு வாக்களித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் முதலமைச்சராக, பிரதியமைச்சராக இருந்து தேசிய கட்சிகளில் போட்டியிட்டவர்களை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் நிராகரித்த வரலாறு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வின் இறுதிநாள் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் அதிகபடியான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

கடந்த மாகாண சபையில் கல்வி அமைச்சு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்த போதும் போதியளவான சேவைகளை எங்களால் செய்ய முடியவில்லை.

மாகாணசபைகளுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அதனை முழுமையாக பயன்படுத்தும் அதிகாரதமதினை மத்திய அரசு மாகாணங்களுக்கு வழங்கவில்லை.

இதன் காரணமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதிலே மாகாணங்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என கேட்கின்றோம்.

புதிய அரசியலமைப்பில் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மத்திய அரசு மீண்டும் மீளப்பெறாத வகையில் அரசியலமைப்பு உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஆளுநரின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது மாகாண சபை தனியொருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

விரைவாக மாகாண சபைத் தேர்தலினை நடாத்தி மாகாண சபையினை மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எதற்காக அமைச்சுப் பதவிகளை ஏற்கவில்லை என பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சி அரசு தற்போது அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு எங்களை அழைக்கிறார்கள். எமது மக்கள் அமைச்சுப் பதவிகளை பெற்று சுகபோக வாழ்கையை அனுபவிப்பதற்காக ஆணையை வழங்கவில்லை.

எமது இனம் இழந்த உரிமையை மீண்டும் பெறுவதற்காக பல உயிர் தியாகங்களை செய்துள்ளது அமைச்சு பதவிகளை பெற்று அற்ப சொற்ப சலுகைகளுக்காக அவர்களின் தியாகங்களை தூக்கி எறிவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

தமிழ் மக்களினைப் பொறுத்தமட்டில் காலம் காலமாக இழந்த உரிமையை பெற்றுத்தருவோம் என நம்பியே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கிறார்கள்.

ஒரு சில கசப்பான விடயங்களுக்காக தமிழ் மக்களில் ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அபிவிருத்தி செய்யுங்கள் என கூறினாலும் பெரும்பாலான மக்கள் எமது அபிலாசைகளை நிறைவேற்றும் வரை எந்த பதவிகளை பெறகூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு அமைச்சுப் பதவிகளை பெற்று அபிவிருத்தி தான் தேவை என்றால் தேசிய கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் பிரதிநிதிகளுக்கு வாக்களித்திருக்கலாம்.

கடந்த காலத்தில் முதலமைச்சராக, பிரதியமைச்சராக இருந்து தேசிய கட்சிகளில் போட்டியிட்டவர்களை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் நிராகரித்த வரலாறு உள்ளது.

நாங்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்றவகையில் இழந்த உரிமைகளைப் பெற்று சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சகல அதிகாரங்களுடன் வாழ வேண்டும் அந்த அபிலாசைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுத்தரும் என்ற நமபிக்கையிலே தான் தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் ஏமாற்றமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.