அப்பாவி தொழிலாளிகளின் உயிரிழப்பு இத்துடன் நிறுத்தப்பட வேண்டும்

Report Print Sinan in அரசியல்

படை வீரர்களும், அதிகாரிகளும் சட்ட வரம்புகளுக்குள் நின்று செயற்பட வேண்டுமெனவும், வயிற்று பிழைப்புக்காக தொழில் செய்கின்றவர்களை பயங்கரவாதிகளாக பார்க்க கூடாது எனவும் கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா - கண்டக்காடு, சாவாறு பகுதியில் அண்மையில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போது தமது உயிரை பாதுகாப்பதற்காக கடலில் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு எந்த சட்டத்திலும் இடமில்லை. இவ்வாறான சம்பவம் நடைபெறுவது இதுதான் முதன்முறையல்ல.

இவ்வாறான சம்பவம் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. இது போன்ற ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேசத்தில் எல்லைப்புறங்களான நடுஊற்று, மகமார், சூரங்கல், சாந்தி நகர், இடிமண், பூ வரசந்தீவு, ஆயிலியடி, வான்எல, மஹரூப் கிராமம் போன்ற பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களது ஜீவனோபாயத்திற்காக காட்டு தொழிலை செய்துவருகிறார்கள்.

காட்டு தொழில் என்பது காடுகளில் விறகு எடுத்து விற்பனை செய்வதாகும். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த போது, தங்களுடைய வாழ்வியலுக்காக காடுகளை நம்பி வாழ்ந்த இம்மக்களுடைய தொழில் அரசாங்கத்தினால் முற்றாக நிறுத்தப்பட்டது. இதனால் இம்மக்களின் ஜீவனோபாயத்திற்கு ஓர் அடி விழுந்தது.

அதன் பிறகு, இம்மக்கள் தங்கள் வாழ்வை ஓட்டுவதற்கு வேறு வழியின்றி மண் அகழ்வுத் தொழிலில் ஈடுபட்டார்கள். மண் அகழ்வுத் தொழில் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும்.

இது சட்டப்பூர்வமாக அனுமதிப்பத்திரம் பெற்று செயற்பட்டாலும் சில விதிமுறைகளை பின்பற்றுவதிலே சிலர் தவறி இருந்தார்கள்.

தவறியிருக்கின்ற பட்சத்தில் அது சட்டவிரோதமான மண் அகழ்வு என்றும் சிலவேளைகளில் விமர்சிக்கப்பட்டது. அது சட்டப்பூர்வமான எல்லைக்குள் உட்படுவதையும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும், இந்த மண் அகழ்விலே ஈடுபட்டிருக்கின்ற மக்கள், தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக இந்த தொழிலை செய்யவேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலையிலேதான் இதனை தொழிலாக செய்துவருகின்றனர்.

இது மிகவும் கஷ்டமான தொழில். மகாவலி கங்கைப் பகுதியிலே கழுவப்பட்டு வந்து சேர்கின்ற மண்ணை எடுத்து, அதனை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது.

அந்தவகையில், அண்மையிலே மண் அகழ்வு தொழிலே ஈடுபட்டிருக்கின்றவர்களை கட்டுப்படுத்துவதற்கு நாட்டினுடைய ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய சட்ட விரோத மண் அகழ்வைத் தடுப்பதற்கு முப்படைகளும் ஈடுபடவேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதற்கிணங்க மண் அகழ்வில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தவகையில், அண்மையில் நடைபெற்ற ஓர் அசம்பாவிதம் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

கடற்படையினர் மாத்திரம் மண் அகழ்வு இடம்பெறுகின்ற இடங்களுக்குச் சென்று சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டார்களா அல்லது அவர்கள் என்ன செய்தார்கள் என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் ஜீவனோபாயத்திற்காக தங்களுடைய தொழிலை செய்கின்ற இளைஞர்களை பிடிப்பதற்காக சென்று அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தபொழுது தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மகாவலிகங்கையிலே பாய்ந்து தமது உயிர்களை இழந்துள்ளார்கள்.

இந்த விடயம் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். சட்டம் இருக்கிறது. சட்டத்திற்கு முன் எவர் பிழை செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியது யதார்த்தமானது.

ஆனால், வயிற்றுப் பிழைப்புக்காக தொழில் செய்கின்றவர்களை பயங்கரவாதிகளைப் போல சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்கின்ற விடயம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இனிமேலும் இவ்வாறான ஒர் அசம்பாவிதம் நடைபெறாமல் நாங்கள் பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாடு எமது அனைவருக்கும் இருக்கிறது.

குறிப்பாக, இந்த தொழிலில்லாத இளைஞர்களுக்கான தொழிலினை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

அடுத்து, குற்றம் செய்கின்ற பொழுது அந்தக் குற்றவாளிகளுக்கு சட்ட வரையறைக்குள் நின்று பாதுகாப்பு படையினரும் அதிகாரிகளும் செயற்பட வேண்டும்.

அவர்களை கொலைக் குற்றங்கள் செய்தவர்கள் போல் அல்லது பயங்கரவாதிகள் போல் நடத்துவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

வயிற்றுப் பிழைப்புக்காக தொழில் புரிபவர்களுக்கு இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது மேலும் இந்த நாட்டிலே ஒரு பாரியதொரு விளைவையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளாக அமையும்.

ஆகவே, அரசாங்கம் இதனைக் கருத்தில் கொண்டு சட்டத்திற்கேற்ப செயற்படுகின்ற ஒரு அமைப்பை அதிகாரிகளுக்கு மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இதற்கான பொறுப்பை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்க வேண்டும்.

இது சட்டவரம்புகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்கின்ற விடயமாக மாத்திரம் இருக்க வேண்டும். இதற்கு அப்பால் சென்று செயற்படுகின்ற அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.