ஜனாதிபதி இறந்து போவார் என எதிர்வு கூறிய ஜோதிடரை விடுதலை செய்த நீதிமன்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து போகும் தினம் குறித்து இணையத்தளம் வழியாக எதிர்வுகூறலை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஜோதிடர் விஜித் ரோஹன விஜயமுனியை விடுதலை செய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என கூறி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக விஜித ரோஹன விஜயமுனிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபருக்கு எதிராக அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையை கவனத்தில் கொண்டு, நீதவான் சந்தேக நபரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி உயிரிழப்பார் என விஜித ரோஹன விஜயமுனி எதிர்வுகூறியிருந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதி வேறு ஒரு தினத்தில் இறப்பார் என மீண்டும் இணையத்தளத்தில் பிரச்சாரம் செய்தார் என பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்தனர்.

முன்னாள் கடற்படை சிப்பாயான விஜித ரோஹன விஜயமுனி தற்போது தன்னை ஜோதிடராக அறிவித்து, எதிர்வுகூறல்களை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கொழும்பில் இந்திய - இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட வந்திருந்த, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையின் போது ராஜீவ் காந்தியை, விஜித ரோஹன விஜயமுனி தனது துப்பாக்கியால் தாக்கினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறி பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.