கன்னியா வெந்நீரூற்றுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று மற்றும் சிவன் ஆலய அபிவிருத்தி தொடர்பாக நேரடியாக வந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் மனோகணேசன் உறுதியளித்துள்ளார்.

ராஜகிரியவிலுள்ள அவரது அமைச்சில் இன்றைய தினம் குழுவொன்று அமைச்சர் மனோ கணேசனை சந்தித்துள்ளது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் உப தவிசாளர் கே. வைரவநாதன் தலமையிலான குழுவினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே திருகோணமலைக்கான விஜயத்தை பற்றி தெரிவித்துள்ளார்.

கன்னியா வெந்நீரூற்று இந்துக்களின் பூர்வீகமான புனித ஸ்தலம் எனவும் இது முன்னர் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் இருந்ததாகவும், 2006ஆண்டு இறுதி யுத்தகாலத்தில் இது வலுக்கட்டாயமாக கைமாற்றப்பட்டது.

இங்குள்ள சிவன் ஆலயமும் சிதைவடைந்துள்ளது. பல கட்டுப்பாடுகள் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே இது பிரதேச சபையிடம் வழங்கப்பட வேண்டும் என பிரதி தவிசாளர் வைரவநாதன் தலமையிலான குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பான கடிதமொன்றை கன்னியா தென்கையிலை ஆதீனத்தின் சார்பில் இக்குழுவில் பங்குகொண்ட திருமூலர் தம்பிரான் அடிகளார் வழங்கியதாகவும் பிரதி தவிசாளர் வைரவநாதன் தெரிவித்துள்ளார்.

இக்குழுவில் பல ஆலயங்களை சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளதுடன், இச்சந்திப்பில் கொண்டு செல்லப்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் மனோகணேசன் இவ்விடயம் தொடர்பாக தான் அறிந்துள்ளதாகவும் திருகோணமலைக்கு தான் நேரடியாக வருகைதந்து குறித்த பிரச்சினைகளை கவனித்து தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.