தைரியம் இருந்தால் நடத்தி காட்டுங்கள்! அரசாங்கத்திற்கு மைத்திரி தரப்பு விடுத்துள்ள பகிரங்க சவால்

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தைரியம் இருந்தால் முதலில் மாகாண சபை தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“தலைமைத்துவம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை வீழ்த்தும் ஆயுதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் கரங்களுக்கு கொடுத்துவிட வேண்டாம்.

கட்சியின் உள்ளக பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலைக் கோரி நாட்டில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நாம் தயாராகவுள்ளோம். எனவே அச்சமில்லை என்றால் தேர்தலை நடத்துமாறு நாம் கோருகின்றோம்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியோடு கூட்டுச் சேருவது எமக்கு உகந்ததல்ல. எனினும், தற்போது பிரிந்துள்ள சுதந்திர கட்சியினர் தேர்தலில் ஒன்றுபட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.