வடக்கை ஏமாற்றி, தெற்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டம்! ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த நான்கு ஆண்டுகளில் வடக்கை ஏமாற்றி, தெற்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹொரணையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரமான மற்றும் சுயாதீன நாடு என்ற வகையில் வெளிநாட்டு தலையீடுகள் அவசியமில்லை என்பதை பௌத்த மகா சங்கத்தினர் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் ஏற்று கொண்டுள்ளனர் என நம்புகிறேன்.

எனினும் அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் தமக்கு தேவையான தீர்மானங்களை எடுக்கும் போது வெளிநாட்டு அமைப்புகளின் தலையீடுகள் பலத்தை எவராவது பயன்படுத்தினால் நாட்டின் சுயாதீன தன்மைக்கும் நாட்டின் இருப்புக்கும் எந்த வகையிலும் பொருத்தமற்றது.

இதனால், தற்போது கூறப்படுவது போன்ற அரசியலமைப்பு சட்டத்தை நான் காணவும் இல்லை. என் கைகளுக்கு கிடைக்கவும் இல்லை.

வடக்கை ஏமாற்றி, தெற்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையே நான் கடந்த நான்கு ஆண்டுகளாக பார்த்தேன்.

இந்த ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்த ஆண்டு கட்டாயம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இந்த நிலைமைகளில் பொதுத் தேர்தல் வரவும் சாத்தியமுள்ளது.

எவ்வாறாயினும் இவை அனைத்திலும் நாட்டிற்கு நன்மை ஏற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஹொரணை கோணபொல ஜயவர்தனாராம பூராண விகாரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அஸ்கிரி, மல்வத்து பௌத்த பீடங்களில் மாநாயக்க தேரர்கள், அநுநாயக்க தேரர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட பலர் கலந்து கொண்டனர்.