நாட்டின் பெயரை இப்படி மாற்ற வேண்டும்! அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை ஜனநாயகம் அல்லது சோசலிச ஜனநாயகம் ஆகிய பெயர்களை நீக்கி விட்டு, இலங்கை குடியரசு என அழைப்பது சிறந்தது என பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை - வெலிகமவில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் ஜனாதிபதி பதவிக்கு வர சிலர் போட்டி போட்டாலும் அவர்களுக்கு நாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றிய புரிதல் கிடையாது.

அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தி செலவிடும் பணத்தை விட மூன்று மடங்கு கடனை செலுத்த நேர்ந்துள்ளது.

இந்த பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்று கூற எவரும் இல்லை. அனைவரும் நத்தார் தாத்தாவை போல் பகிர்ந்தளிப்பது பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

இலவசமாக வழங்குவது பற்றியே பேசுகின்றனர். பெருந்தொகை கடன் தொடர்பான பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று எவரும் கூறுவதில்லை.

ஆனால், நான் அமைச்சராக பதவி வகித்து 12 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. நான் வகித்த அனைத்து அமைச்சுக்களையும் கடன் சுமையில் இருந்து மீட்டேன்.

உதாரணமாக காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு பொறுபேற்ற போது 155 மில்லியன் ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது.

தற்போது 1500 மில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளது. நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமாயின் வேட்பாளராக போட்டியிட விருப்பமாயின் அதற்கு முன்னர் நாட்டை கடன் சுமையில் இருந்து எப்படி மீட்பது என்பதை கூற வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை எப்படி வலுப்படுத்துவது என்ற திட்டம் இருக்க வேண்டும். அதேபோல் நாட்டில் மிகப் பெரிய பாவம் இருக்கின்றது.

அதுதான் குடும்ப அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது. நிபுணத்துவம் மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு செயற்படும் நாட்டை உருவாக்க வேண்டும்.

2005, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தல் வெற்றிகளுக்கான வழியை நாங்களே ஏற்படுத்தினோம்.

அடுத்த முறையும் அதனை செய்வோம். நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து திசைகளையும் ஒன்றிணைக்கக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும்.

நாட்டில் பல போராட்டங்கள் நடந்தன. மீண்டும் நாட்டின் தெற்கு பிள்ளைகளும், வடக்கு பிள்ளைகளும் கொல்லப்படாத, அனைவரும் வலுவாக இந்த நாட்டிற்கு பங்களிப்பை வழங்கும் திறமையை அடிப்படையாக கொண்ட நாட்டை நாங்கள் உருவாக்குவோம்.

ஓரிரு குடும்பங்களுக்கு அல்ல நாட்டில் வாழும் 50 லட்சம் குடும்பங்களுக்கு வெற்றியை தேடி கொடுக்கும் நாட்டை உருவாக்கவே நாங்கள் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.