முதலில் பொதுத் தேர்தலே நடத்தப்பட வேண்டும்!

Report Print Kamel Kamel in அரசியல்

முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாணசபை தேர்தலோ அல்லது ஜனாதிபதி தேர்தலோ தற்பொழுது நாட்டுக்கு தேவையில்லை எனவும் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய நாடாளுமன்றை அமைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த தரப்பினர் தற்பொழுது மௌனம் காத்து வருகின்றனர் எனவும் நாடாளுமன்றை கலைப்பது குறித்து பிரேரணை முன்வைக்கப்பட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினரால் மட்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் நடத்துவது குறித்து இதுவரையில் சரியான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.