மன்னார் புதைகுழி விடயத்தில் தமிழருக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி! சுமந்திரன் தகவல்

Report Print Rakesh in அரசியல்
1352Shares

மன்னார் புதைகுழி விடயத்தில், காபன் பரிசோதனை மூலம் காலத்தை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், அதன்மூலம் இந்த கொடூரம் நடந்தேறிய காலம் உறுதிப்படுத்தப்படுகின்ற போது அது தமிழர் தரப்புகளுக்கு அதிர்ச்சிகளை கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழி விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக சிரத்தை காட்டவில்லையே என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில் அவர் மேலும் கூறுகையில், மன்னார் புதைகுழி விடயத்தில் நாம் மெளனம் காக்கவில்லை. பல இடங்களில் அது குறித்து பேசியிருக்கின்றோம்.

நாடாளுமன்றத்திலும் பல முறை உரையாற்றியிருக்கின்றோம். இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாம் கேட்டிருக்கின்றோம்.

இதில், பிரதானமானது அந்த புதைகுழி சம்பவங்கள் எந்த கால பகுதியில்இடம்பெற்றவை என்பதை திகதியிடுவதாகும்.

அதை நாம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இப்போது அந்த எலும்புகள், எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளொரிடாவுக்கு அனுப்பப்பட்டு, ஓரிரு தினங்களுக்கு முன்னர் அது அங்கு போய் சேர்ந்திருக்கின்றன.

காபன் பரிசோதனை மூலம் அவை எந்தக்காலத்துக்கு உரியவை என்பதை நாம் உறுதிப்படுத்தி கூடியதாக இருக்கும்.

அதன் மூலம், அது எந்தக் காலப் பகுதிக்குரியது என்ற முடிவுகள் வெளியிடுகின்றபோது அது, தமிழ்த் தரப்புகளுக்கும் சில அதிர்ச்சிகளை கொடுக்கும் என்று தான் நான் நினைக்கின்றேன்.

ஆகையினால் நாங்கள் இவ்விடயத்தை வலியுறுத்தாமல் இல்லை. யார்தான் அதற்கு காரணமாக இருந்தாலும் அவர்கள் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பார்கள்.

இலங்கை அரசின் இராணுவமாக இருந்தாலும் நிச்சயமாகப் பொறுப்புக்கூற வேண்டியிருக்கும். அல்லது தமிழ்த் தரப்பிலே ஏதேனும் ஓர் ஆயுதக் குழு இதற்குக்காரணமாக இருந்தாலும் அவர்களும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய தேவைப்பாடு இருக்கும்.

இந்திய அமைதி காக்கும் படை அந்த இடத்திலே இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அது குறித்தும் நாங்கள் அவதானிக்க வேண்டும்.

எந்தக் காலத்தில் இது நடந்தது என்பது உறுதியாகும்போது சில உண்மைகள் வெளியாகும். அதுவரைக்கும் அது குறித்து அதற்கு மேல் நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

ஆனால், காலம் அறியப்படும்போது பல அதிர்ச்சிகள் எமக்கும் காத்திருக்கின்றன என்பது மட்டும் எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.