தனித்து இயங்க தீர்மானித்துள்ள மகிந்த அணி! முரண்பாட்டின் வெளிப்பாடா?

Report Print Steephen Steephen in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சியாக இயங்கி வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) அணி மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் தனித்து கூடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அணியினர் பிரதி செவ்வாய்கிழமை தோறும் கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாட தீர்மானித்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தும் இந்த கூட்டங்களில், தேசிய அரசாங்கத்தில் இருந்து முதலில் விலகிய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியும் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அணியினர் தனித்து கலந்துரையாடல்களை நடத்தினாலும் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டங்களில் கலந்து கொள்வது எனவும் முடிவு செய்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன.

அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மகிந்த ராஜபக்ச உட்பட 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் தனித்து இயங்கி வந்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கூட்டு எதிர்க்கட்சியினர் தனித்து கூட்டம் நடத்துவதை நிறுத்தி கொண்டதுடன் தற்போது மீண்டும் தனித்து கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் இந்த தீர்மானம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான முரண்பாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.