19ஆவது அரசியலமைப்புச் சட்டம் கேலிக்குரியதாக மாறியுள்ளது: ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in அரசியல்

சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கவே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இது தொடர்பாக உடன்படிக்கை இல்லை என்பதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையில், நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம், 19ஆவது அரசியலமைப்பு சட்டம் கேலிக்குரியதாக மாறியுள்ளது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் சில மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டதுடன் ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது.

தனித்து போட்டியிட்ட இடங்களில் ஒரு ஆசனத்தை மட்டுமே முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது எனவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்ட தெரிவாகினர் என தெரிவித்துள்ளார்.