மைத்திரிக்கு வெல்ல முடியாது: தகவல் அனுப்பிய மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது எனவும் அவருக்கு வேட்புமனுவை வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரண்டு தகவல்களை அனுப்பி அறிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஊடாக ஒரு தகவலை அனுப்பியிருந்த மகிந்த ராஜபக்ச, நிமல் சிறிபால டி சில்வா ஊடாக மற்றுமொரு தகவலை அனுப்பியிருந்தாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற ரோஹித்த ராஜபக்சவின் திருமண வைபவத்தில் கலந்துக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா இது சம்பந்தமாக மகிந்த ராஜபக்சவுடன் இரகசியமாக கலந்துரையாடியுள்ளார்.

திருமண வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கால்டன் இல்லத்தில் ஒரு அறைக்குள் இருவரும் இது பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

அப்போது அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த ராஜபக்சவிடம் வினவியுள்ளார். தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என மகிந்த கூறியுள்ளார்.

அத்துடன் இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய பிரச்சினை எனவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்கப்படுவதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்பதாகவும் மகிந்த ராஜபக்ச தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்குறுதி வழங்கவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்த தகவலை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்துமாறு மகிந்த ராஜபக்ச, நிமல் சிறிபால டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய, திலங்க சுமதிபால, இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தார்.

அப்போதும் மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு குறித்து தெளிவாக கூறியதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.