அரசாங்கத்தின் நடவடிக்கை வெட்கத்திற்குரியது! விஜித ஹேரத்

Report Print Murali Murali in அரசியல்

தேசிய அரசாங்கத்தை அமைக்க போவதாக கூறி, ஐக்கிய தேசியக் கட்சி தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கை வெட்கத்திற்குரியது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராகி வருகின்றனர். அமைச்சரவையின் எண்ணிக்கையை 30க்கும் மேல் அதிகரிக்கவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு வென்ற ஒரு நாடாளுமன்ற ஆசனம் இருக்கின்றது.

அந்த ஒரு ஆசனத்தை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்தை அமைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

இது பெரிய வெட்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகிறது.

அரசாங்கம் அமைச்சர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கின்றது. இதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று பயனில்லை. அவ்வாறு செய்ய முடியும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் அப்படியான வாக்கியம் உள்ளது. அதனை பயன்படுத்தியே சட்டத்திற்குள் நுழைய அரசாங்கம் முயற்சித்துள்ளது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.