சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டும் மகிந்த அணி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவது சம்பந்தமாக இதுவரை எவ்விதமான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என பொதுஜன பெரமுனவின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையிலான கூட்டணியை ஏற்படுத்துவதற்காக இரண்டு தரப்பு தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் முன்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்குவது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவின் தலைமையிலான குழு அறிக்கை ஒன்றை தயாரித்து வருவதாகவும் அந்த குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடம்பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

புதிய கூட்டணியின் யாப்புக்கு அமைய, கூட்டணி தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் நிறைவேற்றுச் சபையில் 51 வீதமான பிரதிநிதித்துவத்தை பொதுஜன பெரமுனவுக்கு வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.